Sunday, December 23, 2012

நம் கடவுள் மதம் எதற்கு? - தந்தை பெரியார்


நமக்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமானால்
1. பல கடவுள்களை நம்பித் தீர வேண்டும்.
2. அவற்றுக்கு பல உருவங்களை ஒப்புக்கொள்ளவேண்டும்.
3. அவ்வுருவங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வணங்க வேண்டும்.
4. அக்கடவுள்களின் அவதாரங்களையும் அவற்றின் நடவடிக்கைகளையும் தேவைகளையும் நம்ப வேண்டும்.
நமக்கு மத நம்பிக்கை வேண்டுமானால்
1. ஜாதிப்பிரிவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
2. மதச் சின்னங்களை (டிரேட் மார்க்கை) ஒப்புக் கொள்ள வேண்டும்.
3. ஆத்மாவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
4. மேல் கீழ் உலகங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
5. மறுபிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பவற்றை விளக்கிக் காட்டி மக்களிடம் கடவுள் - மத மறுப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்கு ஆகவே இக்கட்டுரை எழுதுகிறேன்.
இன்றைய சைவர்களுடைய சைவப் பிரச்சாரம் பெரிதும் பெரிய புராணம் ஒன்றிலேயே அடங்கிவிட்டது. அது அஸ்திவாரம் இல்லாத ஆகாயக்கோட்டை.
அது வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம், பக்த லீலாமிர்தம் என்னும் வைணவ புராணங்களுக்குப் போட்டியாக (அதைப் போல்) ஏற்படுத்தப்பட்டதாகும். அதன் காலம் இராமாயண - பாரதத்திற்குப் பிந்தியதேயாகும்.
அநேகமாக வைணவ பக்தர்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் கதைகள் போலவே, ``சரித்திரங்கள்'' போலவே சைவ சமய நாயன்மார்கள், பக்தர்கள் கதைகளும் ``சரித்திரங்களும்'' இருக்கும்.
இரண்டிலும் உள்ள முக்கிய விஷயங்கள், அற்புதங்கள் எல்லாம் விஷ்ணு, சிவன் கடவுள்கள் கழுகுமீதும், மாடுமீதும் நேரில் வந்து வைகுண்டமும் கைலாயமும் ஆகிய பதவிகளுக்கு பக்தர்களை அழைத்துப் போனதாகவே பெரிதும் முடியும். அவற்றின் கருத்தும், பக்தி செய்தால் அதுவும் பக்தியின் பேரால் எவ்வளவு முட்டாள்தனமும் ஒழுக்கக் கேடும் இழிதன்மையுமான காரியமும் செய்தாலும் பக்தி காரணமாக வைகுண்டம், கைலாயம் பெறலாம் என்பதை வலியுறுத்துவதேயாகும்.
இப்படிப்பட்ட பக்திப் பிரச்சாரங்களேதான் மனித சமுதாயத்தில் பெரிதும் ஒழுக்கக்கேட்டையும் நாணயக் கேட்டையும் உண்டாக்கிற்று என்று சொல்லப்படுமானால் அது மிகையாகாது.
காலத்திற்கு ஏற்றபடி கடவுள்கள் சமயங்கள் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகும். கிறிஸ்து, இஸ்லாம் கடவுள், சமயங்கள் சீர்திருத்தப்பட்ட கடவுள், சமயங்களேயாகும்.
பெரிய புராணக் கதையும் பக்த விஜயக் கதையும் காட்டுமிராண்டித்தனமான காலத்தில், கருத்தில் ஏற்படுத்தப்பட்டவையேயாகும்.
அவற்றில் ஒவ்வொன்றாக காலப் போக்கில் குறிப்பிட இருக்கிறேன். சமயத் தலைவர்கள் சீர்திருத்துவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?
பார்ப்பனர்கள் சிலர் சீர்திருத்தத்திற்குப் பயப்படுகிறார்கள் என்றால் அவர்கள் இன்றைய சீர்கேடான கீழ்த்தரமான கடவுள், சமயக் கொள்கைகளால் உயிர் வாழுகின்றார்கள். உயர்வு பெறுகிறார்கள். அது போய்விடுமே என்று அவர்கள் அலறுகின்றார்கள். குறுக்கே படுக்கின்றார்கள்.
நாம் இன்றைய சீர்கேடான நிலைமையினால் நாச முறுகிறோம். தலையெடுக்காமல் சேற்றில் அழுந்திக் கிடக்கிறவர்கள் போல் சிக்குண்டு கிடக்கின்றோம். ஆகவே, பார்ப்பானைப் போல் நாம் எதற்காகப் பிடிவாதக்காரர்களாக இருக்க வேண்டும்?
நம் கடவுள்களும் கோயில்களும் ஆகம முறைகளும் நம்மைக் காட்டுமிரண்டியாக ஆக்கி நம் அறிவையும் மானத்தையும் கொள்ளை கொள்ளுவதல்லாமல் நம் பொருள்களை எவ்வளவு நாசப்படுத்தி வருகிறது?
கிறிஸ்துவ, இஸ்லாம் மத பிரச்சாரம் படிப்பு - படிப்பு - படிப்பு என்பதிலேயே இருக்கிறது. அவர்கள் இந்த நாட்டில் பார்ப்பனர்களைப் போலவே மைனாரிட்டி சமுதாயங்களாக இருந்தாலும், பார்ப்பனர்களைப் போலவே நம்நாட்டில் மண்வெட்டி மண்கூடை எடுக்காமல் நல்வாழ்வு வாழ்கிறார்கள். அரசியலில் நம்மைவிட நல்ல உயர்பங்கும், அரசியலில் நம்மைவிட நல்ல உயர் பங்கும், சமுதாயத்தில் நல்ல பாதுகாப்பும் பெற்று வாழ்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு உதவியது அவர்கள் சமயம்தான். நம் கடவுளையும், சமயத்தையும் ஏற்ற மக்கள் தான் 100-க்கு 100 மலமெடுக்கிறார்கள், கசுமாலக் குழியில் இறங்கி சேறு எடுக்கிறார்கள். 100-க்கு 75 பேர் மண்வெட்டியையும் நம் பெண்கள் மண் சுமக்கும் கூடையையும் சொத்தாக வைத்து வாழ்கிறார்கள்.
படிப்பிலும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நம்மை விட இரண்டு பங்கு மூன்று பங்கு வீதம் அதிகமானவர்கள் படித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நம் மதவாதிகள், மதத் தலைவர்கள், மதப் பிரச்சாரகர்கள் நம் மக்கள் குறைகளையும், இழிநிலையையும், அறியாமையையும் மாற்றுவதற்கு என்ன செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்யப் போகிறார்கள்? ``திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாதாரும்'' என்றும், ``திருப்பதி மதியாப் பாதம்'', ``சிவனடி வணங்காச் சென்னி'' என்றும் பாடினால் போதுமா? கூழில்லாமல் கும்பி பாழாவதைப்பற்றிச் சிறிதுகூடச் சிந்தியாமல், ``நீறு இல்லாத நெற்றிபாழ்'' என்றும் பிரச்சாரம் செய்தால் போதுமா?
நம் நாட்டையும், நம் மனித சமுதாயத்தையும் தலையெடுக்கவொட்டாமல் பாழாக்கிய பார்ப்பனர்களைப் போலவே நம் சமயவாதிகள் சிவ, விஷ்ணு சமயாச்சாரியார்கள் என்று சொல்லப்படுமானால் அதற்கு யார்தான் மறுப்புக் கூற முடியும்? இன்று தமிழ்நாட்டிலே கோயிலுக்கு அழுது நாட்டை நாசமாக்கியவர்களான நாட்டுக்கோட்டை செட்டிமார்களில் பலர் துணிந்து மனந்திரும்பி கல்வி அளிக்கும் வள்ளல்களாக இருக்கிறார்கள். அண்ணாமலை கல்லூரியே ஏற்படாமலிருந்தால் நம்மவர்களில் உயர் படிப்பு படித்தவர்கள் ஆயிரக்கணக்கில் இவ்வளவு பேர் இருக்க முடியுமா? முடியாது, முடியாது, முடியவே முடியாது என்று சொல்லுவேன். மற்றும் அழகப்பா கல்லூரி, தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றால் நம் பிள்ளைகள் எவ்வளவு பேர் படித்தவர்களாக ஆகி இருக்கிறார்கள், ஆகி வருகிறார்கள் என்பதைப் பார்த்தும் நம் சமயாச்சாரியார்களுக்கு நல்லறிவு வரவில்லையானால் அது நம் நாட்டைப் பிடித்த நோய் என்றுதானே சொல்லவேண்டியதாகும்.
திருச்சியில் கிறிஸ்தவக் கல்லூரி கிறிஸ்தவருக்கும், பார்ப்பனருக்கும் தான் பெரிதும் பயன்படுகிறது. பார்ப்பனர் கல்லூரிகள் பார்ப்பனர்களுக்கே பயன்படுகிறது.
இஸ்லாம் கல்லூரியில் இஸ்லாமியர்கள் போக மீதிதான் நமக்குக் கிடைக்கலாம். அப்படியெல்லாம் செய்வதில் அவர்கள் மீது குற்றமென்ன? இவ்வளவு பெரிய பழைமையான தமிழன் நகரத்திலே தமிழனுணர்ச்சி உள்ள தமிழர் இருந்தும் தமிழனுக்குக் கல்லூரி இல்லை. சீரங்கமும், திருவானைக்காவலும், தாயுமானசாமி மலையும், சமயபுரமும் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை இலட்சம் ரூபாய்களை நாசமாக்குகிறது. எவ்வளவு பேரை முட்டாளாக்குகிறது?
இந்தக் கோயில்களை இடித்து அல்லது இந்தக் கோயில்களுக்கு வருபவர்களுக்கு ஆளுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வீதம் ``கேட்டில் வரி வசூல் செய்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவசக் கல்லூரிப் படிப்பு கொடுத்தால் எந்த சாமி கோபித்துக் கொள்ளும்? எந்த பக்தன் நாசமாய்ப் போய் விடுவான்?
தருமபுரம் திருவாவடுதுறை, திருப்பனந்தாள் முதலிய நூற்றுக்கணக்கான சைவ மடாதிபதிகளின், ஆண்டொன்றுக்கு சுமார் அய்ம்பது இலட்சத்துக்குக் குறையாது கோடி ரூபாய்வரை வரும்படியும், தஞ்சை மாவட்டத்தில் சுமார் ஆண்டொன்றுக்கு அய்ம்பது இலட்சத்துக்குக் குறையாத வரும்படி உள்ள கோயில்களின் வரும்படியும், தமிழ்நாட்டில் மற்றும் லட்சம் லட்சமாக வரும்படி வரக்கூடி கோயில்களின் வரும்படியும் கல்விக்கு செலவழித்தால் தமிழ்நாட்டில் பி.ஏ., படிக்காத ஆணையோ, பெண்ணையோ காண முடியும்? மற்றும் சர்க்கார் கொடுக்கும் பஸ், லாரி பர்மிட்களும், பண்டங்களுக்குக் கொடுக்கும் பர்மிட்களும் ஏன் ஒரு யோக்கியமான அதாவது சுயநலத்துக்குப் பயன்படுத்தாத தன்மையில் ஒரு கல்வி ஸ்தாபனம் ஏற்படுத்தி அதற்குக் கொடுத்து அவர்களிடம் கல்வி நிருவாகம் கொடுத்து சர்க்கார் மேற்பார்வையில் அதன் வரும்படியைக் கொண்டு நடத்தச் செய்யக் கூடாது?
மதமும், கடவுளும் மக்களுக்கு தொண்டு செய்யவா? அல்லது மக்கள் மதத்திற்கும், கடவுளுக்கும் தொண்டு செய்யவா? பலியாகவா? என்று கேட்டு முடிக்கின்றேன்.
குறிப்பு: இதை நம் கழகத் தோழர்கள் நல்ல வண்ணம் படித்து மக்களுக்குப் பிரச்சாரம் செய்யவேண்டுகிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
(`விடுதலை, 12.10.1962)

ஒழிக்கப்பட வேண்டியவை எவை?


தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள் நன்மை_தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும். முதலாவதாக மேல்ஜாதி, கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான் _ கடவுளுக்குச் சமமானவன். அவன் சாமி, பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள்.
மனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே! மேல்ஜாதி என்பது பாடுபடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி, பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.
இரண்டாவதாக, பணக்காரன் -_ ஏழை. இது எதற்காக? பணக்காரன் ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப் பவன்! ஏழை_பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்து விட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?
மூன்றாவதாக, ஆண்_எஜமானன்! பெண்_அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி, பெண் அடிமைதான்! சில நிர்பந்தம், அடக்குமுறை ஆண்களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண்_எசமான்; பெண்_அடிமை; இந்த வேறுபாடு தேவையில்லாதது. அக்கிரமமானதும் கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.
இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97 பேர் கீழ்ஜாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97 பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மையினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.
காரணம்: 1. கடவுள், 2. மதம், 3. அரசாங்கம்.
கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால், மதம் _ சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழிய வேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும்வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக்கிறார்கள் - திராவிடர் கழகத்தைத் தவிர?
(12.11.1958 அன்று மேலவாளாடியில் பெரியார் சொற்பொழிவு  - விடுதலை 07.01.1959)

தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்? - தந்தை பெரியார்



முதலாவது நான் பகுத்தறிவுவவாதி. எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான். பஞ்சேந்திரியங்களுக்கும் தெரியப்படும்
விஷயங்களை நம்புவேனே தவிர, பஞ்சேந்திரியங்கட்கு புலப்படாத எதையும் நம்புவதில்லை. மற்றும் தமிழர்களுக்காக,நம் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறேன். தொண்டாற்றுவதில் கடவுள் பற்று, மதப் பற்று இன்றி தொண்டாற்றி வருகிறேன். அதனால்தான், உண்மையாகத் தொண்டாற்ற முடிகிறது என்று கொள்கைகளில் கருத்து வேற்றுமை உள்ளவர்கள் அநேகர் இருப்பார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரை எனது தொண்டு வீண்போக வில்லை என்று கருதித்தான் தொண்டாற்றி வருகிறேன்.


ஒரு சந்தர்ப்பத்தில் சேலம் கல்லூரியில் அப்போது இருந்த கல்லூரி முதல்வர் எனக்கு நண்பர். அவர் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ்ப் பற்று என்கிற காரணத்தால் என் மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர் பேசும்போது, அய்யா அவர்கள் நாஸ்திகர் என்றாலும், மக்களுக்காகத் தொண்டாற்றுபவர் எனக் குறிப்பிட்டார். எனக்காகப் பேசியதாக இன்னொருவர் நான் நாஸ்திகன் அல்ல என்று வாதாடினார். அன்றும் இப்படித்தான் பேசுவதற்கு எனக்கு தலைப்புக் கொடுக்கவில்லை. என்ன பேசுவது என்று தெரியாமலிருந்தபோது இந்த நாஸ்திகம் என்பதையே வைத்துப் பேசினேன்.
அதுபோல, இங்கு தலைவரவர்கள்  தனது வரவேற்புரையில், தமிழைப் பற்றி குறிப்பிட்டர். இப்போது இது பரபரப்பாக இருக்கிறது.  பலர் என்னைக் கண்டித்து கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். சிலர், நீ தமிழனா? என்று கூடக் கேட்டு எழுதி இருக்கிறார்கள். சிலர் எனது கொள்கையை ஆதரித்தும் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். நாம் எல்லோரும் தமிழ்நாட்டில் இருக்கிறோம், நாமெல்லாம் தமிழர்கள்தான்; நான் மொழிப்படி தமிழனல்ல; கன்னடியன் எனக்கு தமிழ் தெரிந்த அளவுக்கு கன்னடம் தெரியாது. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழன் சிறப்பைச் சொல்லும்போது, அது கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்கிறான். தமிழ் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வழங்கி வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து அதன் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
நான் அயல்நாடுகளையெல்லாம் சுற்றியிருக் கிறேன். அங்கெல்லாம் இங்கிலீஷைப் பாதுகாக்க வேண்டுமென்று இயக்கமோ, அதற்காக ஒரு போராட்டமோ கிடையாது. ஆனால், அந்த மொழி யாருடைய  பாதுகாப்பும் இன்றி வளர்ந்து கொண்டும், பரவிக் கொண்டும்தான் வருகின்றது.
மொழியின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து மக்களிடையே எவரும் பிரச்சாரம் செய்வது கிடையாது. மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவர் உணரப் பயன்படுத்தும் ஒரு சாதனமே தவிர, மற்றபடி அதற்கென்று தனிச் சிறப்புக் கிடையாது! தமிழிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு இவைகள் தோன்றின என்று சொல்லுவார்கள். ஆனால், மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடி யனோ, துளுவனோ எவனும் இதனை ஒத்துக் கொள்வதில்லை. அந்தந்த எல்லைக்குத் தக்கபடி மாற்றமடைந்துள்ளது.
வடமொழியின் கலப்பு அதிகமாகி தமிழுக்கும், அதற்கும் சம்பந்தமில்லாமல் போய்விட்டது. வடமொழி கலப்பது ஒரு காலத்தில் நாகரிகமாகக் கருதப்பட்ட காரணத்தால் வடமொழிக் கலப்பு அதிகமாகி விட்டது. இப்படி நாகரிகம் - சந்தர்ப்பம் நடப்பு வழக்கம், காலம் இவைகளைப் பொறுத்து மொழி மாறுபட்டிருக்கிறது.
நம் நாட்டிலேகூட நாகர்கோயில்காரன் தமிழ் பேசுவதற்கும், திருநெல்வேலிக்காரன் பேசுவதற்கும் மாறுபாடு உண்டு. அது போலவே, மதுரைக்காரன் பேசுவதற்கும், திருச்சிக்காரன் பேசுவதற்கும், தஞ்சாவூர்க் காரன் பேசுவதற்கும், சேலம்காரன் பேசுவ தற்கும், கோயமுத்தூர்காரன் பேசுவதற்கும், சென்னையிலுள்ள தமிழன் பேசுவதற்கும் நிறைய மாறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட நம்மோடு பல காலமாகப் பழகி நம்மோடு இருக்கும் பார்ப்பனர் பேசுவது தனி அலாதியாகத்தான் இருக்கிறது. தமிழ் படித்த புலவர்களே மேடையில் பேசுவது போல வீட்டில் பேசுவது கிடையாது. இப்படி இடத்திற்குத் தக்க மாதிரி, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பேசுகிறார்கள்.
தமிழ் பேசுவதிலேயே இலக்கணப்படி பேசுவதற்கும் சாதாரணமாகப் பேசுவதற்கும் நிறைய மாறுபாடு இருக்கலாம் என்றாலும் நான் மொழியைப் பற்றி சொல்லுவதெல்லாம் மொழியினாலே நமக்கேற்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட நன்மையென்ன? அதனால் நம் மக்கள் எந்த அளவிற்கு முன்னுக்கு வந்தார்கள்? என்பதற்குத்தான். இதைக் கேட்டால் தமிழன்பர்கள் என்ன சொல்வார்கள்? எனக்கு கடிதம் எழுதிய ஒருவர் தமிழில் பெரிய புராணம், சிலப்பதிகாரம், குறள், கம்பராமாயணம் இவைகள் எல்லாம் இருப்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். இதிலிருந்து அவர் வேறு ஒன்றுமில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். இன்னொரு நண்பர் தொல்காப்பியம் என்ற நூல் இருப்பது தெரியுமா? என்று எழுதியிருக்கிறார். கம்பராமாயணம், சிலப் பதிகாரம் இதைச் சொன்னதிலிருந்தே தமிழின் தன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாமே!
தொல்காப்பியத்திலே தான் என்ன இருக்கிறது? அதிலும் நாலு ஜாதி; அந்த நான்கு ஜாதியில் நம்மைத் தான் கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்கு................
என்ற பாடலைப் பார்த்தாலே போதுமே. தமிழ் ஏதோ புலவன் பிழைப்புக்குப் பயன்படுகிறதே தவிர, அதனால் நம் மக்களுக்குப் பயன் இல்லை. அதன்படி நாம் கீழ்மக்கள்தானே.
குறளை ஒரு அளவுக்கு நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதை பரப்பியதில் எனக்கு பெருமை பங்கு உண்டு.
குறளைப் பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது இருந்தபோது குறள் மாநாடு கூட்டி, தமிழ்ப் புலவர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி குறளைப் பற்றி மக்களுக்கு விளக்கம் செய்து குறளைப் பரப்பினேன். இந்த மாநாட்டிற்கு மறைமலை அடிகளைத் தவிர மற்ற தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.
நான் பேசும்போது, குறள் குற்றமற்ற நூல் என்று சொல்ல முடியாது என்றாலும், மற்ற நூல்களில் இருப்பதைவிட இதில் குறைகள் குறைவு என்று சொல்லலாம். அந்த அளவுக்குத்தான் குறளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினேன்.
அந்த மாநாட்டிற்கு திரு.வி.க. தலைமை வகித்தார். நான் இப்படிப் பேசியதை சிலர் போய் மறைமலை அடிகளிடம் சொல்லி இருக்கிறார்கள். என்னவென்றால், அவன் குறளைத் தான் பாக்கி வைத்திருக்கிறான் என்று நினைத்தேன். அதிலேயும் கை வைக்க ஆரம்பித்து விட்டானே. இதற்கு இவர் (திரு.வி.க.) போய் தலைமை வகிக்கிறாரே என்று வேதனையோடு சொன்னார்கள்.
திரு.வி.க. அவர்களை சந்திக்க நேர்ந்தபோது, மறைமலை அடிகள், நீ என்ன குறள் மாநாட்டிற்கு தலைமை வகித்தாயாமே, அதில் பேசியதையெல்லாம் எப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாய்? என்று கேட்டார்.
அதற்கு திரு.வி.க., அவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. இத்தோடு விட்டதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும். அவரில்லா விட்டால் குறள் இந்த அளவிற்கு வந்திருக்காது என்று ஏதோ சமாதானம் சொல்லி இருக்கிறார்.
பிறகு ஒரு சமயம் மறைமலை அடிகள் தனது லைப்ரரியை விற்க வேண்டுமென்று கருதி என்னை அழைத்து தனது லைப்ரரியைக் காட்டினார். குறைந்தது 20 - 30 பெரிய பெரிய கண்ணாடி பீரோக்கள் நிறைய புத்தகங்கள் இருந்தன. பீரோவின் இரு பக்கமும் கண்ணாடி கதவுகள் போட்டு புத்கங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்து கடைசியில் அடிகளாரைப் பார்த்து, என்ன சாமி எல்லா புத்தகங்களும் இங்கிலீஷ் புத்தகங்களாகவே இருக்கின்றனவே. தமிழ்ப் புத்தகங்கள் ஒன்றுகூட காணவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர்,
தமிழிலே அலமாரியிலே வைத்து பாதுகாக்கும்படியாக மக்களுக்குப் பயன்படும் படியாக என்ன இருக்கிறது? என்று சொன்னார். அதற்கு நான் சொன்னேன், சாமி எழுதிய புத்தகங்கள் இருக்குமே என்று சொன்னேன்.  அது நிறைய இருக்கிறது. இன்னும் அச்சுப் போட வேண்டியவைகளும் இருக்கின்றன என்றாலும், இதோடு அவைகள் வைக்கக் கூடியவை அல்ல என்றார். அவர்  அந்த அளவுக்கு ஒத்துக் கொண்டது எனக்கும் மகிழ்ச்சியளித்தது.
தமிழ் என்று சமயத்திலே போய் புகுந்ததோ, சமயக்காரன் எப்போது தமிழ் கதவைத் திறந்து இறந்தவனை எழுப்பியது என்று சமயத்தில் கொண்டு போய் புகுத்தினானோ, அன்றே தமிழும் முன்னேற முடியால் கெட்டுப் போய் விட்டது.
பட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ் படித்து சாமியானவர்கள் தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய, எவனும் பகுத்தறிவு வாதியாகவில்லை. நமக்குத் தெரிந்து மறைமலை அடிகள் தமிழ்ப் படித்து சாமி ஆனவர்தானே. இப்போது நடந்தது சாமிசங்கரதாஸ் நூற்றாண்டு விழா. இந்த சங்கரதாஸ் என் வீட்டில் வந்து நாடகத்துக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். சங்கரம் பிள்ளை என்று பெயர். பிறகு சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆகி இன்று சாமி ஆகிவிட்டார். அதற்கு முன் தமிழ்ப் படித்தவர்கள் எல்லாம் கவியாகப் படித்தவர்கள். இப்போது போல் வசனமாகப் படித்தவர்கள் அல்ல. ஆதலால் அவர்களுக்கு கவி எழுத வந்தது. எல்லாம் குப்பை கூளங்கள்தான். கா. சுப்பிரமணிய பிள்ளை காலையில் எழுந்ததும் பட்டைப் பட்டையாக சாம்பலை அடித்துக் கொண்டு அரைமணி நேரம் தேவாரம், திருவாசகத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். இந்த திரு.வி.க.வும் அப்படி இருந்தவர்தான். என்னோடு பலமுறை வாதிட்டு கொஞ்ச நாள் கோபமாகக் கூட இருந்து பிறகு பழக ஆரம்பித்தார். அதன்பின்தான் அவர் சாம்பல் அடிப்பதையும், தேவாரம் ஓதுவதையும் நிறுத்தினார். பிறகுதான் அவர் உண்மையாகத் தொண்டாற்ற முடிந்தது.
(29.9.1967 அன்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை - விடுதலை 3.10.1967)

வெள்ளைக்காரன் இருந்திருந்தால்........


- தந்தை பெரியார்
பார்ப்பனர் தமிழர் கலப்பு உடையவர்கள் ஆனாலும், ஆரிய கலாசாரத்தைப் பின்பற்றுகிற வர்கள் ஆவார்கள். அதுவும் தங்களை - தங்கள் பிறவியை உயர்த்திக் கொள்ளவும் மற்றவர்களைத் தாழ்த்தவும் மாத்திரமே அக்கலாசாரத்தை ஒரு சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறவர்கள்.
இதனாலேயே, இதற்காகவே அவர்கள் தங்களை மற்ற தமிழர்களிடமிருந்து வாழ்க்கை முறையில் பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி வருகிறோம். எதுபோல் என்றால், நம் நாட்டில் உள்ள சட்டைக்காரர்கள் அல்லது ஆங்கிலோ இந்தியர்கள் என்கின்ற பிரிவார் அய்ரோப்பியர் அல்லர்; வெள்ளைக்காரர்களும் அல்லர். தமிழர் பெண்களும் அய்ரோப்பிய ஆண்களுக்குமாகப்  பிறந்தவர்கள்.
அப்படி இருந்தாலும் அவர்கள் தகப்பனையே முக்கியமாகக் கருதி, தாயை மறந்து அய்ரோப்பிய கலாசாரத்தை அதாவது பழக்க வழக்கம், மனப்பான்மை ஆகியவற்றைக் கையாண்டு, தங்களை சட்டைக்காரர், இந்தோ-அய்ரோப்பியர்கள் என்று சொல்லிக் கொண்டு (வெள்ளையன் காலத்தில்) உயர்வு வாழ்வு, உயர்ந்த சலுகை பெற்று துரை என்ற பெயரால் தொப்பி போட்டுக் கொண்டு வாழ்ந்ததைப் போல், இந்தப் பார்ப்பனர்கள் தங்களை ஆரியப் பட்டமாகிய பிராமணர்கள், அய்யர், ஆச்சாரியன், ரிஷிகள் முதலிய பட்டத்தை வைத்துக் கொண்டு, ஆரியச் சின்னமாகிய பூணூலைத் தரித்துக் கொண்டு ஆரிய உடை அணிந்து கொண்டு ஆரிய பழக்க வழக்க நடப்பு மனப்பான்மையைக் கொண்டு தனி சலுகை, தனி உரிமை முதலியவற்றை அனுபவித்துக் கொண்டு நம்மை தலையெடுக்க வொட்டாமல் செய்து வருகிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன்.
இன்று அதைச் சட்டபூர்வமாய் கொண்டு அடைந்து வருகிறார்கள். ஆட்சிக் கலப்படமற்ற ஆரியர் ஆட்சி என்பதை ஆச்சாரியார் மறுப்பாரா? டில்லி ஆட்சி என்றால் என்ன? மத்திய ஆட்சி என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே, எல்லாம் பெரிய தலைமைப் பதவிகளிலும் தமிழர் அல்லாதவன் அல்லது ஆரியக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறவன் அடைந்து வருகிறான் என்பதை ஆச்சாரியார் மறுக்க முடியுமா?
இந்தக் காரணத்தில்தான் நான் ஆரியர் - திராவிடர் அல்லது பார்ப்பனர் (பிராமணர்) தமிழர் (சூத்திரர்) என்று பிரித்துக் கூறுகிறேன். இதில் எப்படி ஓட்டை கண்டுபிடிக்க முடியும்? மற்றும் ஒரு துணிகரமான விஷயம் என்னவென்றால் பார்ப்பானின், உயர்வாழ்வையே பொதுநல நல்வாழ்வாகவும் பார்ப்பானின் (ஆரிய) ஆட்சியையே நல்ல ஆட்சியாகவும் கொண்டு பேசப்படுவதே ஆகும்.
தமிழ், தமிழ்நாடு, தமிழர் ஆட்சி, தமிழர் வாழ்வு என்பனவெல்லாம் அடியோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஆரிய ஆட்சியின் சட்டமும் திட்டமுமாக இருந்து வருகிறது.
1 . மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவு ஒழிந்து மக்கள் ஒரு ஜாதி ஆவதை ஆச்சாரியார் நான் சர்வ வல்லமையுடன் எதிர்க்கிறேன். இதை நான்தான் சொல்லமுடியும். இதற்காகவே உயிர் வாழ்கிறேன் என்கிறார்.
2. தமிழ்நாட்டுக்கு ``தமிழ்நாடு என்ற பெயர் கூடாது.
3. தமிழ்நாடு தமிழ்மொழி நாடாக அமைக்கப்படக்கூடாது.
4. தமிழ்நாட்டில் தமிழர்கள் மைனாரிட்டிகளாய் (மற்ற மொழிக்காரர்களை விடக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களாய்) இருக்கும்படியான அளவில் கன்னடியர் நாட்டையும், மலையாளிகள் நாட்டையும், சேர்த்து ஒரு நாடாக்கி தமிழர்களைச் சிறுபிரிவினராக ஆக்க வேண்டும் என்கிறார்.
5. இது முடியாவிட்டால் தமிழ் நாட்டுடன் ஒரு கன்னட ஜில்லாவும், ஒரு மலையாள ஜில்லாவுமாவது சேர்ந்து இப்போது இருக்கிறபடி இருந்து கொண்டு, பார்ப்பனர் அல்லாதவர்-தமிழர் என்ற பெயரால் தமிழனின் பங்கு பதவி, உத்தியோகங்களைப் பெரும்பாலும் கேரளத்தானும், கர்நாடகத்தானுமே அடைந்து இருக்கட்டும் என்கிறார்.
6. இதுவும் முடியாது என்றால், இன்னும் அய்ந்து ஆண்டுகளுக்கு ஆவது பிரிவினை அமைப்பே வேண்டாம் என்கிறார்.
7. இதுவும் முடியாவிட்டால் தமிழ்நாடு டில்லி ஆட்சியில் (மத்திய ஆட்சியில்) இருக்கும்படி தமிழ்நாடு ஆட்சியை டில்லிக்குக் கொடுத்துவிட வேண்டும் என்கிறார்.
இவற்றை என்ன என்னவோ காரணங்களைச் சாக்காகக் கொண்டு  வலியுறுத்துகிறார்.
இதற்குச் சிறிது கூட சிந்தனை இல்லாமல் வெகு சமீபத்தில் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தையும், சில மாதங்களுக்கு முன் செய்யப்பட்ட சட்டசபைத் தீர்மானங்களையும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் அடியோடு எதிர்க்கும் முறையில் துணிவாகப் பேசுகிறார்.
இந்தியாவை 21 சுதந்திர நாடாகப் பிரித்து அந்நாடுகளுக்குப் பூரண அதிகாரம் கொடுப்பது என்று திட்டம் செய்து கொண்டு, அந்தப்படி இந்தியாவை மொழி வழியாகவே பிரித்து, 25 ஆண்டுகளாகப் பிரிவினையைக் காரியத்தில் செய்து கொண்டு வந்து, அந்த முயற்சி தமிழ்நாட்டிற்கு வரும்போது, அதுவும் தமிழ் நாட்டானும், கேரள நாட்டானும், கர்நாடக நாட்டானும் அனேகமாய் அபிப்பிராய பேதமில்லாமல் பிரிந்து கொள்ள விரும்பி, ஆவலாய் இருக்கும்போது, அவரவர்கள் சட்டசபையிலும் பிரிந்து கொள்ளத் தீர்மானித்துக் கொண்டிருக்கும்போது இடையில் தீவட்டிக் கொள்ளைக்காரர் புகுந்தது போல - சில பொறுப்பற்ற நாணயமற்ற சுயநலமிகளைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு கொள்ளைக்கு வருவது போல் முரட்டுத்தனமாய்க் கூப்பாடு போட்டுக் கொண்டு பேயாட்டம் ஆடுகிறார். இதைத் தமிழ் மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள் என்றே கருதுகிறார்.
மேலே காட்டப்பட்ட ஏழு அய்ட்ட பேச்சுகளும், விஷமமும், சதிகளும், துரோகங்களும் நிறைந்து வழிபவைகளாகவே இருக்கின்றன.
ஜாதி இருக்க வேண்டுமென்றால் என்ன அருத்தம்?
பிராமணன்,  சூத்திரன், பஞ்சமன் என்பதாக மதத்தின்படி, சாஸ்திரத்தின்படி, சட்டத்தின்படி, பழக்கத்தின்படி  மக்கள் இருக்க வேண்டும்; நடத்தப்படவேண்டும், அவரவர்களுக்கு மதசாஸ்திர சட்டப் பழக்க வழக்கத்தின்படி உண்டான தன்மைகள்படி அவனவன் நடக்க, பலாபலன்களை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதுதானே அருத்தம்.
இப்பொழுது தெரிகிறதா? பொதுமக்களே! ஆச்சாரியார் கல்வித் திட்டத்தை ஆதரித்த முண்டங்களே!! ஆச்சாரியாரின் கல்வித் திட்டம் வர்ணாசிரமத்தை-ஜாதி முறையை அடிப்படையாகக் கொண்ட கல்வித் திட்டமேயாகும் என்பது.
ஆச்சாரியார் முதல் மந்திரியாய் இருந்த காலத்தில் அவர் திட்டங்கள் பெரிதும் ஜாதியைக் காப்பாற்றும் திட்டம்தான் என்று நான் கூறி வந்ததும் 1938_ல் ஆச்சாரியார் முதல் மந்திரியாய் இருந்த காலத்தில் வடமொழியையும் இந்தியையும் தமிழர்களிடையில் கட்டாயமாய் புகுத்தியதன் உள் அந்தரங்கமும் வர்ணாசிரமம் - ஜாதி முறையை பாதுகாக்கவே என்பதும் இப்போது மக்கள் உணரலாம்.
நான் காங்கிரசிலிருந்து விலகக் காரணம் என்ன என்பதும் இப்போதாவது  பொதுமக்கள் உணரலாம். வெள்ளையன் போகாமல் இந்த 10 வருட காலம் இப்போது இந்திய ஆட்சியை நடத்தி வந்திருப்பானேயானால், பார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு நம்மவர்களே, தமிழர்களே புருஷர்களாக இருந்து ஜாதியின் ஆதிக்கம் பகுதிக்கு மேல் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கும். பார்ப்பனப் பெண்கள் நம்மவர்களை வலுவில் காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் பார்ப்பனர்களுக்கு வெள்ளையர்கள் மீது ஆத்திரம் வலுக்க ஆரம்பித்தது.
ஆச்சாரியார் பெண் காந்தியார் மகனைக் காதலித்ததும் யார் யாரோ தடுத்தும், காந்தியார் தடுத்தும், ஆச்சாரியார் தடுத்தும் காந்தர்வ விவாகமாக முடிந்ததும் வெள்ளையன் ஆட்சியின் பலன் அல்லவா?
அவ்வளவு ஏன்? பண்டிட் மோதிலால் நேரு மகள் முஸ்லிமைக் காதலித்தது வெள்ளையன் ஆட்சியின் பயன் அல்லவா?
இதனால் ஒரு குறைவுமில்லை என்றாலும், இதன் தத்துவம் ஜாதி செத்து வருகிறது என்பதுதானே! அந்தப் போக்கு அப்படியே சென்று இன்றுவரை வெள்ளையன் இருந்திருந்தால், 100க்கு 75 பார்ப்பனர்கள் ஒழிந்தே இருப்பார்கள். முற்றும் ஆரியம் மலையேறி இருக்கும்.
இந்த நிலையில் வெள்ளையன் போக நேரிட்டதும் தமிழ் நாட்டின் ஆட்சி மத்திய ஆட்சியின் கீழ் என்னும் பேரால் வடநாட்டான் ஆரியன் கைக்குப் போனதும் எல்லாம் ஜாதியைக் காப்பதற்கே அல்லாமல் வேறு எதற்கு? உயர்ந்த ஜாதியை காப்பதற்கே அல்லாமல் வேறு எதற்கு? உயர்ந்த ஜாதியான் என்பதற்குக் கடுகளவு யோக்கியம், ஒழுக்கம், நாணயம் எவனிடமாவது இருக்கிறதா?
மத்திய ஆட்சி என்பதற்கு ஆக எந்த இலாகாவிலாவது அறிவோ, நாணயமோ இருக்கிறதா?
துரோகிகள், நாட்டைக் காட்டிக் கொடுத்து மானத்தை விட்டுக் கூட்டிக் கொடுப்பவர்கள், தெரியாதவர்கள் போல் நடித்து மக்களை ஏய்த்து ஈனவாழ்வு வாழ்ந்தாலும் மற்ற பொதுமக்களாவது இன்றைய ஆட்சியின் எல்லாத் துறைகளும், எல்லா முறைகளும் ஜாதியைக் காப்பாற்றவும் புதுப்பிக்கவுமே ஆகும் என்பதை உணர வேண்டாமா? தமிழர்களே!  உணர்மின்! ஆத்திரத்தில் சொற்கள் தடிப்பாக வருவதால் மேலே போகப் பயந்து கொண்டு இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
மற்ற அய்ட்டங்களைப் பற்றி பின்னால் எழுதலாம் என்று இருக்கிறேன்.
குறிப்பு: இக்கட்டுரையை எழுதத் தொடங்கும்போது சொற்களை நிறுத்தி அடக்கமாகவே போட முடிந்தது.
எழுத எழுத ஆத்திரம் மேலோங்கியதால், எனக்கும் கட்டுப்படுத்த முடியாததால், திடீரென்று நிறுத்திக் கொண்டேன்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை
(`விடுதலை, 21.6.1956)

இதுதான் என் கடைசி ஆசை


புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயண கவியார், தம் 82ஆம் அகவையில் - தி.பி. 2012 (23.05.1981)ல் உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார்.
அந்த ஆவணத்தில், செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது.
என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை.
மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள்.
இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது. இனி ஒரு பயனும் இல்லை.
கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!
- சந்திரன் வீராசாமி, திருச்சிராப்பள்ளி

சரஸ்வதி பூஜை என்பது என்ன?


- தந்தை பெரியார்
சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.  அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.
அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது  ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால்  வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.
ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில்  ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து  பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில்  வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது  அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக்  கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும்  சரஸ்வதியாய் கருதி தொட்டுக்  கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு  நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.
ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு  செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு  தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது - 20.10.1929 குடிஅரசு இதழில் வெளியானது)

தீபாவளி


அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள்.
துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலான தாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக் கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங் களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ "காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது" என்றால் உடனே "கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா" என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய "காளைமாடு எப்படி கன்றுப் போடும்" என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம்.
உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங் களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே  தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண் ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறு வதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ் தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார் களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் "ஆரியர் வேறு தமிழர் வேறு" என்பாரும் "புராணங்களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை" என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு "நாங்கள் தான் பிரதிநிதிகள்" என்பாரும் மற்றும் "திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு" மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற "படித்த" கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங் களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.
****
எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.
அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமாயிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.
தீபாவளியின் கதைச் சுருக்கம்: ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டு மென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.
முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? "எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு"க்கும் பூமி "தேவி"க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி "தேவி" என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! "பொறுமையில் பூமிதேவிபோல்" என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த "அம்மையாரை" உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!
தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே  தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட் டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது?
புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?
சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
"குடிஅரசு" 01.11.1936

சமதர்மம்


சமதர்மம் என்றால், சாதாரணமாக பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது.
இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால், மதக்காரர்களுக்கும், கடவுள் நம்பிக்கைக் கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும், குடி இருப்பதற்கு ஓட்டைக் குடிசை கூட இல்லாமல் பரிதவிக்கும் பொழுது எந்தவிதமான வேலையும் செய்யாது, பணக்காரனாக இருக்கின்ற சந்தர்ப் பத்தால், அக்கிரமமாக அநீதியாக தொழிலாளர் களைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, தான் மட்டும் படோடோபம் டம்பாச்சாரித்தனமாக வீண் விரையமாக்குவது சரியல்ல.
எல்லோரும் கஷ்டப் பட்டு வேலை செய்து பலனை எல்லோரும் சமமாக அனுபவிக்கலாம் என்று சொன்னால், அது முதலாளி களுக்கும், பணக்காரர்களுக்கும், ஜமீன்தார், மிட்டா மிராசுதார் முதலியவர்களுக்கும் விரோதம் என்று வீண் கூக்குரலிடப்படுகிறது. சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அதுபோலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும், பொருளும் எல்லாம் குடும்ப பொதுச் சொத்து போல் எல்லா மக்களுக் கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம்போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து, உண்டு உடுத்தி இன்ப வாழ்வு வாழ வேண்டுமென்பதுதான்தான் சமதர்மம், மற்றபடி இதில் பயப்படத்தக்க காரியமும், புரியாத காரியமும் இல்லை.
இந்த சமத்துவமான வாழ்க்கை வேண்டுமென்று கூறும்பொழுது சமதர்ம விரோதிகளான மதவாதிகளும், ஆஸ்திகர்களும் துள்ளிக் குதித்து அது கடவுளுக்காகாது. அவனவன் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்றாற்போல் சுகமான வாழ்க்கையோ, கஷ்டமான வாழ்க்கையோ நடத்துகிறான். பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பது கடவுள் சித்தம் அவர் கடாட்சத்தால் அவனுக்கே தனி உரிமை கொடுக்கப்பட்ட பொருள்களைப் பொதுவுடைமை ஆக்கப்படல் அநீதி, கடவுள் கட்டளைக்கு விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள். இன்றைக்கு முனிசிபல் கட்டடத்தையோ, பொது ரஸ்தாவையோ, ரயில்வேயையோ எடுத்துக் கொள்ளுங்கள். இதில் யாருக்கு உரிமையில்லையெனக் கூற முடியும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவற்றை அனுபவிக்கிறார்களா? இல்லையா? இதனால் எந்தக் கடவுளுக்கு, மதத்துக்கு அல்லது பணக்காரனுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூற முடியுமா? ``மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததான பல வசதிகளையும், சாதனங்களின்றி மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும், பரவாயில்லை. எனக்குத் தேவைக்கு மேலிருந்தாலும், நான் அனுபவிப்பதற்கு வேண்டிய அளவுக்கு மேலிருந் தாலும், அது சும்மா இருந்து வீணாக அழிந்து போவதானாலும், பிறர் அனுபவிக்க நான் பார்க்கக் கூடாது என்றாலும், குறுகிய புத்தியும், கீழான எண்ணமும், சுயநல உணர்ச்சியும் கொண்டவர் களுக்கும்தான் உழைக்கக் கூடாது, உடல் வளையக் கூடாது. ஆனால், பிற மக்கள் உழைப்பதினால், விளையும் பயனைத் தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சிமிக்க சோம்பேறி களுக்கும்தான் சமதர்மம் கசப்பாகவோ, வெறுப் பாகவோ, விரோதமாகவோ இருக்குமே தவிர, அவர்கள் இதைப்பற்றி மறுப்பார்களே தவிர மற்றபடி உடலைச் சாறாகக் கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளி மக்களுக்கு இந்தக் கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பெரிதும் சாதகம் செய்யவல்ல வாழ்க்கை நிலைமை உயர்த்தவல்ல ஜீவ தாது இது என்றுதான் கூறவேண்டும். உலக ஜனத் தொகையில், 100க்கு 90 பேருக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பாமர மக்கள் ஆகியவர்களுக்கு அனுகூலமாயிருக்கின்றன. இந்தத் தத்துவத்தை நியாய புத்தியும், நேர்மையும் நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட அனைவரும் ஆதரித்துத்தான் தீருவார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் மலிந்த இன்றைய சமுக அமைப்பால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ, சாந்தியோ, சமாதானமோ உண்டு என்று கூற முடியுமா? ஏழைக்கு கஞ்சியில்லை, கட்டத் துணி இல்லை, இருக்க வீடில்லை. ஓய்வில்லை, இல்லாத பிள்ளைக்கு கல்வி வசதி இல்லை என்பன போன்ற பல ஓயா கவலையே கவலையாய் சதா வறுமைக் கடலிலே கிடந்துழல்கிறான். பணம் படைத்த பணக்காரர்களுக்கோ இருப்பதைக் காக்கவேண்டும், மேலும் பெருக்க வேண்டும், பிறர் கவராது காப்பாற்றவேண்டும் என்றும் கவலையோடு பேராசை மிகுதியால் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கவே ஆசைப்படுகின்றார்கள். சாதாரணமாக ஒரு தோட்டி வேலை செய்யும் கீழ்தர நிலையில் உள்ளவன், ஆடு, கோழி வளர்த்துக் கொஞ்சம் பணக்காரனாக வேண்டும். பின்னர் மணியக்கா ரனாக ஆக வேண்டும் என்றெண்ணுகிறான். மணியக்கார வேலை கிடைத்தாலும், தாசில்தாராக வேண்டுமென்று ஆசிக்கிறான். அப்படியானாலும், கலெக்டர் ஆகவேண்டும், கவர்னர் ஆகவேண்டும். வைஸ்ராயாக வேண்டும், ஏக சக்கிராதிபதியாய் உலகாள வேண்டும். இன்னும் இதற்குமேல் வேறு உலகங்கள் இருந்தாலும் அவற்றையும் தான் ஒருவனே கட்டி ஆளவேண்டும் என்று கருதுகின்றான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும், தேவைக்குமேற்பட்ட சொத்துகளுக்கு சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கவுரவம் என்றும், தனி மதிப்புக்குப் பாத்திரமானது என்றும், கண்ணியமானது என்றும் கருதுகின்ற ஒரு ``மூட நம்பிக்கையே தவிர வேறில்லை.
இந்த மூட நம்பிக்கையின் பயனாய்த் தான் மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது, பிறரையும் அனுபவிக்க விடாது, வைக்கோல் போரைக் காக்கும் நாய்போல் வாழ்கின்றான். இந்தத் தனிவுடைமை வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படக் கூடிய பல பொருள்கள் சாதனங்கள் வீண் விரையம் செய்யப்படுகின்றன.
உதாரணமாக மோட்டார் காரை எடுத்துக் கொள்வோம். ஒரு செல்வந்தர் குடும்பத்துக்குத் தனியாக ஒன்று அல்லது மேற்பட்ட கார்கள் வைத்துக் கொண்டிருப்பது இன்றைய அனுபவம். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு மனிதனுக்கு மூன்று அல்லது நான்கு மணிநேர தேவைக்காக உபயோகிக்கப்படும் மோட்டார் ஒரு நாளில் இருபது மணிநேரம் வீணாக யாதொரு பயனும் இன்றி இருக்கிறது. இதில் வீணாக பணம் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலை மாறி பஞ்சாயத்து போர்டு அல்லது முனிசிபாலிட்டிகளில் ஜனத்தொகைக்குத் தக்கவாறு 10, 15, 20 கார்கள் வைத்துக் கொண்டால், பொதுவில் தேவைப்பட்ட நேரங்களில் உபயோகித்துக் கொண்டால் வீணாக பணம் முடங்கிக் கிடக்க வேண்டிய தேவையில்லை.
இம்மாதிரியான முறைகளை அனுசரிப்பதால் வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு மக்கள் எல்லோரும் மனித வாழ்வை இன்ப மயமாக்கும் பல சாதனங்களையும் அனுபவித்துப் பயன்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும். இதற்கு பாடுபடாது பிறருழைப்பில் படோடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.
செங்குந்த மகாஜன மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு,
(`புரட்சி, 10.6.1934).

ஜாதிகளை ஒழிப்பது எப்படி?


ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன. ஜாதிப் பட்டங்கள் (அய்யர், முதலியார் பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாய்க்கர், ரெட்டியார், நாடார் முதலியன) சட்ட-பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்.
புதிதாக மணம் புரிவோர் அத்தனை பேரும் கலப்பு மணம் செய்யுமாறு தூண்டக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும், கட்டுத் திட்டங்களையும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர் களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும். ஜாதிகளைக் குறிக்கும், நெற்றிக் குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களையும் சட்ட-பூர்வமாகத் தடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஜாதிகள் அடியோடு ஒழியும்.

இவை மட்டுமல்ல, ஜாதிக்கு அடிப்படையா யிருப்பது எது? ஹிந்து மதம்! அதை ஆதரித்து நிற்பவை எவை? வேதம், இதிகாசம், சாஸ்திரம், புராணம் முதலிய கட்டுக்கதைகள். இவற்றுக்கு அடிப்படையாக உள்ளவை என்ன? இந்துமதக் கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள். எனவே, இவ்வளவையும் ஆணி வேருடன் பிடுங்கி எறிந்தா லொழிய ஜாதியை எப்படி ஒழிக்க-முடியும்? இவ்வளவையும் காப்பாற்று வதற்காக உள்ள ஒரு சமுதாயமான பார்ப்பனர்களின் வைதீக மனப் பான்மையை மாற்றியாக வேண்டும். அல்லது அவர்களைத் தனியாகப் பிரித்து நீக்கி வைக்க வேண்டும்! ஏன்?
ஜாதிகள் ஒழியவதனால் பாதிக்கப்-படுபவர்கள் பார்ப்பனர் களேயாவர். ஜாதி உயர்வு, என்ற அடிப்படையினாலேயே அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னணிக்கு வந்திருக் கிறார்கள். இல்லாவிட்டால் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு, கால்நடையாக வந்த இந்தக் கால்நடைகள் இன்று இந்நாட்டுக் குடிமக்கள் எல்லோரையும் விட ஆயிரமடங்கு உயர்ந்த நிலைமையில் இருப்பதற்குக் காரணம் என்ன? அது மட்டுமா? இன்று பெரிய பெரிய புரட்சிக்காரன் முதல், மகாகனம் போன்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கைக்கூலி வரையில், எல்லா இயக்கங்களிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்களே ஒழிய ஜாதியை ஒழிப்பது என்பதைக் கொள்கை யாகக் கொண்டு இடைவிடாத தொண் டாற்றக் கூடிய ஒரு பார்ப்பனராவது இன்று இந்த நாட்டில் இருப்பதாக யாராவது எடுத்துக்கூற முடியுமா என்று அறை கூவிக் கேட்கிறோம். ஹிந்து மதம் ஒழிந்தால் தான் ஜாதி ஒழியும். ஹிந்து மதம் ஒழிந்தால் பார்ப்பனியமும் அதே நேரத்தில் அழிந்து போகும். இதை பஞ்சமா பாதகம் செய்யும் பார்ப்பான் கூட விரும்பமாட்டான்!
இங்கிலீஷ் அரசியல் அமைப்பு என்ற நூலை எழுதிய புரொபசர் டிசே என்பவர் புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான்; போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்பமாட்டான், கூறியிருக்கிறார். அதுபோலவே, பார்ப்பனனாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்கு உள்ள அதிகாரம், ஆதிக்கம், இவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கின்றன! இவர்கள் இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும் சரியாகுமா? என்று கூறிப் பிரித்து வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டில் இருக்கும் வரையில் இங்கிலீஷ் காரரைப் பின்பற்றி இந்தப் பிரித்தாளும் பித்தலாட்ட வேலையைச் செய்து கொண்டுதான் இருப்பான்! ஜாதிப் பிரிவுகள் பகுத்தறிவுக்கு முரணானவை என்பதையும் பார்ப்பனர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், பகுத்தறிவுக்கு ஹிந்து சாஸ்திரங்கள் 144 உத்தரவு பிறப்பித்துக்கின்றன.
எந்தப் பிராமணன் தர்க்க சாஸ்திர பலத்தைக் கொண்டு வேதத்தின் உண்மையைப் பற்றிச் சந்தேகிக்கின்றானோ, அப்பேர்ப்பட்ட வேத நிந்தகன் சாதுக்களால் நாஸ்திகன் என்று பகிஷ்கரிக்கப்படுகிறான். என்று மகாபாரதம் கூறுகிறது. எனவே, பார்ப்பான் மட்டுமல்ல எந்த இந்துவுமே பகுத்தறிவுக்கு இடந்தர மாட்டான். இடந் தர முடியாது. இடந்தந்தால் இந்துவாக இருக்க முடியாது!
யார் என்ன சொன்னாலும் ஆயிரக்-கணக்கான ஆண்டு களாயுள்ள ஹிந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது நமது ஹிந்து மதம், என்று சர். ராதாகிருஷ்ணன் போன்ற மேதாவிகள் (?) கூறலாம். உயிரோடிருப்பதனால் மட்டும் ஒரு விஷயம் உயர்வான தாய் விடுமா? எவ்வளவோ எதிர்ப்புகளுக் கிடையே எலி, கொசு, ஈ, தேள், பாம்பு, மூட்டைப் பூச்சிகள் கூடத்தான் உயிரோடிருக்கின்றன. மனித சமுதாயமே எதிர்த்து வரும் குடி, விபசாரம் கூடத்தான் உயிரோடிருக்கின்றன? இவை-யெல்லாம் இந்து மதத்தை விடப் புனிதமானவை களா? அதிகப் பலன் தரக் கூடியவைகளா, என்று கேட்கிறோம்.
இறுதியாக ஒன்று கூறுவோம். ஜாதிகளை ஒழிக்க விரும்புவோர் மேடைப் பிரசங்கம் மட்டும் செய்தால் போதாது! கலப்பு மணத்தைத் தவிர வேறு சுயஜாதி மணம் செய்யவே கூடாது. புத்தரும் குருநானக்கும் கூறியதுபோல் வேதமும் சாஸ்திரங்களும் முழுப்பொய் என்று பச்சையாகக் கூறவேண்டும். இவற்றைச் செய்யக்-கூடிய ஆற்றலும், துணிவும், தியாக உணர்ச்சியும் படைத்த இளைஞர்களால் தான் ஜாதியை ஒழிக்க முடியும்? இந்த வேலையைச் செய்பவை தான் நமது திராவிடர் கழகமும், சுயமரியாதை இயக்கமும்.
- 10.1.1947இல் விடுதலையில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து...

சிந்தனை செய்!


ஏவுகணை எனும் போர் ஆயுதம்


தமிழ்: அப்பா! எங்கள் ஆசிரியர் ஏவுகணை எனும் புராஜக்ட் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள் அப்பா!
தந்தை: உட்காரு இப்படி. ஒரு குறிப்புப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள். ஏவுகணைதானே, பிரமாதம், தகவல்களைக் கொட்டி ஜமாய்த்திடுவோம்.
தமிழ்: அப்பானா, செல்ல அப்பாதான். இதோ குறிப்புப் புத்தகம், எழுதுகோல். நான் தயார். அம்மா, நீங்க சூடான உணவு பண்ணுங்க. இதை முடிச்சிட்டு நானும் அப்பாவும் கிளம்புறோம். எனக்கு முதல் சந்தேகமே இராக்கெட்டும், ஏவுகணையும் ஒன்றா, இரண்டும் வேறு வேறா என்பதுதான்.
தந்தை: இரண்டும் வேறு வேறு. இராக்கெட் என்பது இராக்கெட் இயக்கத் தத்துவ அடிப்படையில் இயங்கும் ஒரு வாகனம். ஆனால், ஏவுகணை (missile) என்பது ஓர் ஆயுதம். எனவேதான் செயற்கைக்கோளை வானில் செலுத்தப் பயன்படுத்தும் இராக்கெட் ஆனது. அனேக வேளைகளில் செயற்கைக்கோள் செலுத்து வாகனம் (Satellite Launching Vehicle) அல்லது பூஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது.
தமிழ்: ஓ! அதுதான் எஸ்.எஸ்.வி 1 , எஸ்.எல்.வி 2 என்றெல்லாம் பெயர் கொடுத்திருக்கிறார்களோ. இவ்வளவு நாளும் எஸ்.எல்.வி. என்பதற்கு விரிவு தெரிந்து கொண்டதில்லை. ஏவுகணைகள் யாவை?
தந்தை: ஓரிடத்தில் இருந்தபடி செலுத்தினால் எதிரியின் போர்விமானம், போர்க்கப்பல்கள், இராணுவ டாங்கி ஆகிய போர்ச் சாதனங்களை அல்லது எதிரி நாட்டின் படைத்தளங்களை அல்லது நகரங்களை போரில் தாக்கி அழிக்கிற போர் ஆயுதத்தை ஏவுகணை என்று கூறலாம். .
எந்த இலக்கைத் தாக்க வேண்டும் என்பதைப் பொறுத்து ஏவுகணை வடிவிலும் அளவிலும் திறனிலும் வேறுபடுகின்றன. சிறிய ஏவுகணைகள் சில கி.மீ. தொலைவு சென்று பறந்து தாக்கும் திறனுடையவை. எதிரியின் போர் விமானம், போர்க்கப்பல்கள், டாங்கி முதலிய போர்ச் சாதனங்களைத் தாக்குகின்ற ஏவுகணைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.
தமிழ்: ஏவுகணைகளில் வேறுபாடுகள் உண்டா?
தந்தை: உண்டு. விமான எதிர்ப்பு ஏவுகணை, டாங்கி எதிர்ப்பு ஏவுகணை, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை என்று பலவகைப்படுத்தப் பட்டுள்ளன. இவ்வகை ஏவுகணைகள் தரையிலிருந்து செலுத்தப்படுபவையாக இருக்கலாம்.
தமிழ்: ஆனால் எதிரியின் விமானம், போர்க்கப்பல் அல்லது டாங்கிகள் நிலையாக ஓரிடத்தில் நிற்பவை அல்ல. வேகமாகச் சென்று கொண்டிருப்பவை. வேகமாகச் செல்லும் இவைகளை இலக்காக வைத்து ஏவுகணைத் தாக்க முடிகிறது.
தந்தை: சரியான கேள்வி. உதாரணமாக, எதிரியின் போர் விமானம் மணிக்குக் குறைந்த அளவு 1000க்கும் மேற்பட்ட கி.மீ. வேகத்தில் பறந்து செல்லக்கூடும. அவ்விதம் பயங்கர வேகத்தில் செல்லும் எதிரி விமானத்தைத் தாக்க ஏவுகணைகளில் சிறப்பான கருவிகள்  அமைக்கின்றனர். எஞ்சின் இல்லாமல் விமானம் இயங்க இயலாது. அவ்வாறு இயங்குகையில் விமானத்தின் பின்புறத்தில் சூடான புகை வெளிப்படுகிறது. இந்த வெப்பத்தை மோப்பம் பிடித்துச் செல்வதற்கு விமான எதிர்ப்பு ஏவுகணையில் குறிப்பிட்ட கரு உள்ளதால் அது விமானத்தின்  சூடான புகை வெளிவரும் பாதையைப் பற்றிக்கொண்டு எதிரி விமானத்தைவிட அதிக வேகத்தில் பறந்து சென்று, துரத்தித் தாக்குகிறது.
தமிழ்: விமானம் திசையை மாற்றினால் ஏவுகணை பலனின்றிப் போய்விடுமே.
தந்தை: சில விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் அந்த ஏவுகணையைச் செலுத்திய கருவி அனுப்பும் ஆணைகளுக்கு ஏற்பத் திசை மாற்றும் கருவிகளும் உள்ளன. ஏவுகணை வருவதை ரேடார் காட்டிவிடும் என்பதால் ரேடாரின் பார்வையில் படாமல் தாழ்வாகப் பறந்து சென்று தாக்கும் ஏவுகணைகளும் உள்ளன.
தமிழ்: நான் ஏவுகணை என்றால் ஏதோ போர் அடிக்கும் என்றேன். நீங்கள் சொல்லும் செய்திகள் சுவையாக இருக்கின்றன. மேலும், மேலும் கேட்க வேண்டும் என்னும் ஆவல் பெருகுகிறது. ஏவுகணைகளில் எத்தனை வகைகள் உள்ளன?
தந்தை: எதிரி விமானத்தைத் தரையிலிருந்து புறப்பட்டுத் தாக்கும் ஏவுகணைகள், விமானத்திலிருந்து புறப்பட்டு எதிரி விமானத்தைத் தாக்குகிற ஏவுகணைகள் என இரு வகைகள் உள்ளன. எதிரிப் பகுதியில் உள்ள துறைமுகம், விமான தளம் ஆகிய இலக்குகளைத் தாக்கவல்ல ஏவுகணைகளும் உள்ளன. இப்பணிக்கு விமானத்திலிருந்து புறப்பட்டுச் சென்று தாக்கும் ஏவுகணைகளும் பயன்படுத்தப்படுவது உண்டு.
தமிழ்: அய்.ஆர்.பி.எம்., அய்.சி.பி.எம். என்று குறிப்பிடுகிறார்களே, அவையும் ஏவுகணைகளா?
தந்தை: அய்.ஆர்.பி.எம். என்பதற்கு Intermediate Range Ballistic Missile என்று கூறுவர். கண்டம் விட்டுக் கண்டம் சுமார் 6,000 மைல் சென்று தாக்கும் ஏவுகணைகளை அய்.சி.பி.எம். Inter-Continental Ballistic Missile என்று கூறுவர். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் பிரம்மாண்ட வடிவின. இதன் நீளம் 60 அடி இருக்கும். ஏவுகணைகளிலேயே இவைதான் பேரழிவு ஏற்படுத்து பவை. பெரிய வல்லரசுகள்தாம் அய்.ஆர்.பி.எம்., அய்.சி.பி.எம். வகை ஏவுகணைகளை நிறையத் தயாரித்து வைத்துள்ளனர். பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை முகப்பில் கொண்ட இராட்சத ஏவுகணைகளைத் தற்காப்பு ஆயுதங்கள் எனலாம்.
தமிழ்: அப்படியானால் தாக்குதல் ரக ஆயுதங்களும் இருக்கின்றன என்று சொல்லலாம் அல்லவா?
தந்தை: குறைவான அழிப்புத் திறன் கொண்ட, குறிப்பிட்ட போர்ச் சாதனத்தை மட்டுமே அழிக்க, சிறிய ஏவுகணை களைத் தாக்குதல் ரக ஆயுதங்கள் எனலாம். விமான எதிர்ப்பு ஏவுகணை, டாங்கி எதிர்ப்பு ஏவுகணை, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை முதலிய சாதாரண குண்டுகளை அல்லது வெடி மருந்தை முகப்பில் கொண்ட ஏவுகணைகள் ஆங்காங்கு நடந்துள்ள போர்களில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகத் தரையிலிருந்து சென்று எதிரியின் பகுதிக்குச் சென்று தாக்கும் ஏவுகணைகள் பொதுவில் அளவில் பெரியவை. இவ்வித ஏவுகணைகளில் சாதாரண வெடிகுண்டுகளைத் தாங்கிச் செல்கின்ற ஏவுகணைகள் நடுத்தர அளவில் உள்ளன.
தாய்: என்ன, ஏவுகணை பற்றியெல்லாம் பேசி முடிச்சாச்சா. உணவு தயார்.
தந்தை: பொறு, பொறு இன்னும் சில தகவல்கள் இருக்கு. அதைப் பரிமாறிக் கொள்கிறோம். அப்புறம் உன் உணவு பரிமாறலாம்.
தமிழ்: செயற்கைக்கோளை வானில் செலுத்தும் இராக்கெட்டை அய்.சி.பி.எம். போன்ற இராட்சத போர் ஆயுதமாக மாற்றமுடியுமா?
தந்தை: அவ்வாறு போர் ஆயுதமாக நீ சொல்லும்படி மாற்ற அதிக நுட்பம் தேவை. அப்படி மாற்றுவதானால் ஏவுகணையின் முகப்பில் வைக்கப்படும் குண்டு, குறிப்பிட்ட இலக்கில் போய் விழும்படிச் செய்வதற்கான வழி அறியும் ஏற்பாடு Guide and System அந்த ஏவுகணையில் இடம் பெற்றாக வேண்டும். அய்.சி.பி.எம். ஏவுகணையால் உயரே கொண்டு செல்லப்படும் குண்டு அணு ஆயுதமாகவும் இருக்கலாம், நாம் உயரே தூக்கி எறிந்த கல் கீழே விழுவதைப்போல் கீழ்நோக்கி விழுகிறது.
தமிழ்: ஏவுகணையிலிருந்து பிரியும் குண்டைப் பற்றிச் சொல்லுங்கப்பா. தந்தை: பூமியிலிருந்து சுமார் 100 மைல்களுக்கு அதிகமான உயரத்தை எட்டியதும், ஏவுகணையின் முனையிலிருந்து பிரியும் குண்டானது மணிக்குச் சுமார் 16,000 மைல் வேகத்தில் தரை இலக்கை நோக்கிப் பாய்கையில் அது காற்று மண்டல உராய்வு காரணமாக ஏற்படும் மிகுந்த வெப்பத்தைத் தாங்கி நிற்கும் வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அய்.சி.பி.எம்., அய்.ஆர்.பி.எம். ஆகிய ஏவுகணைத் தயாரிப்பதில் பல நுட்பப் பிரச்சினைகள் உள்ளன. சிறிய ஏவுகணைகள் முற்றிலும் வேறுபட்டவை. போதுமா ஏவுகணைகள் பற்றிய தகவல்கள்.
அம்மா: பரவாயில்லையே. உங்களை என்னமோ சாதாரணமா நினைச்சேன். ஏவுகணை பற்றி இவ்வளவு விவரம் ஞாபக சக்தியோடு சொல்வீர்களென்று நினைக்கலே. உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
தந்தை: பரவாயில்லையே, நல்லதைப் பாராட்டுகிற நல்ல மனம் உன் அம்மாவிடம் இருக்கிறதே. இதுதான் நாகரிகம். சரி, பசிக்குது உன் உணவு இராக்கெட்டுகள், ஏவுகணைகள் தட்டில் வந்து விழட்டும்.
தமிழ்: ஏவுகணை பற்றி விளக்கிச் சொன்னதுக்கு நல்லதுப்பா. ஆனா, எனக்கென்னமோ இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி போர் செய்யவேண்டாமேன்னு தோணுது. போர்னாலே மனிதர்களைக் கொல்றது தானே...அது வேண்டாமே...
- பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்